img_container
09 Mar

கொவிட் - 19 காலகட்டத்தில் இளைஞர்களும் தகவல் தொழில்நுட்பமும் தொடர்பாக திரு. லஹிரு பத்மலால் உடனான ஒரு கலந்துரையாடல்

Venue : Facebook
Date : 03/09/2020
Time : 09:15 AM

Takas.lk இன் ஸ்தாபகர்களில் ஒருவரான லஹிரு பத்மலால் “கொவிட் - 19 கால கட்டத்தில் இளைஞர்களும் தகவல் தொழில்நுட்பமும்” என்பது தொடர்பாக Values4all எனும் ஓர் இணையத்தள மூலமான கருத்தரங்கில் பேசுவதற்கு இணைந்து கொண்டார். கலந்துரையாடல் செப்டெம்பர் 3 ஆம் திகதி, 2020 அன்று Zoom செயலி மூலமாக நடைபெற்றது. ஒரு தொழில்முனைவராக, பத்மலால் Takas.lk நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து ஏறத்தாழ 6 வருடங்கள் வரையில் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியாக சேவையாற்றினார். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மாத்திரம் ஒன்லைன் மூலமாகவும் மற்றும் கடனட்டைகள் மற்றும் குறூப்ஓன் (Groupon) கணக்கு செயலி உள்ளவர்கள் மாத்திரமும் பொருட்களை கொள்வனவு செய்யும் ஒரு பின்னணியில் 2012 இல் Takas.lk கருத்தோற்றம் பெற்றது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு தீர்வுடன் முன்வருவது பத்மலால் மற்றும் அவரது சக ஸ்தாபகர்களான, டிலான் விமலசேகர மற்றும் முர்தசா மூசாஜி ஆகியோர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இவ்வாறாக, இலங்கையிலுள்ள எவரும் ஒன்லைன் மூலமாகப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்ற இலங்கையின் முதலாவதும் மற்றும் மிகவும் பிரபல்யமான இலத்திரனியல் வர்த்தகத் தளங்களிலொன்று ஆரம்பிக்கப்பட்டது. விநியோகத்தின் போது பணம் செலுத்தும் வசதியையும் கூட Takas சேவையே முதலில் வழங்கியது. இலங்கையின் இலத்திரனியல் வர்த்தகத்தின் நிலை பற்றிக் குறிப்பிடுகையில், ஒன்லைன் மூலமாக வியாபாரம் செய்யும் அதிகரித்த போக்கு தொடர்பாக பத்மலால், தனது கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில், இலத்திரனியல் மூலமான வர்த்தகம் அல்லது இ-வர்த்தகம், பாரம்பரிய கடைகள் மூலமான 13 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 40-50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொகையினையே காண்பிக்கிறது. இ-வர்த்தகம் அடுத்த பத்தாண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என கணிக்கப் பட்டுள்ளதானது, வாய்ப்பு வளம் கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் புதிய வியாபார முயற்சிகளுக்கு ஒரு வளம் மிக்க சந்தை வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆசிய பங்குச் சந்தைகளால் வெளியிடப்பட்ட ஓர் அண்மையை அறிக்கையை மேற்கோள் காட்டி, கொவிட் - 19 பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன் 13% ஆக இருந்த ஒன்லைன் மூலமான பொருட் கொள்வனவு, பெருந்தொற்றின் பின்னர் (அதாவது, மார்ச் இலிருந்து ஜூலை 2020 வரை நாடு முடக்கப்பட்டிருந்த காலப் பகுதியில்) 63% ஆக அதிகரித்திருந்ததையும், மேல் மாகாணத்தில் கொவிட் - 19 இற்கு முன், பல்பொருள் அங்காடிகளின் (சுப்பர் மார்க்கெட்கள்) 83% ஆக இருந்த விற்பனை, கொவிட் - 19 இன் பின்னர் 53% ஆக வீழ்ச்சியடைந்ததையும், அவர் சுட்டிக்காட்டினார். மார்ச் - ஏப்பிரல் 2020 முடக்க காலத்தின் போது ஒன்லைன் மூலமான கொள்வனவுகளுக்கான கேள்விகளை எதிர்கொள்வதில் பெரும் பல்பொருள் அங்காடிச் சங்கிலிகள் (chain-supermarkets) திணறியதையும், Takas மற்றும் ஏனைய சிறிய வியாபாரங்கள் ‘வட்ஸ்அப்’, மற்றும் ‘இன்ஸ்டகிராம்’ என்பவற்றை உபயோகித்து சவால்களை எதிர்கொண்டதையும், அதன் மூலம் சமூக ஊடகத்தை வியாபாரத் தொடர்பு கொண்டதாக ஆக்கியதையும் அவர் நினைவுபடுத்தினார். பாவனையில் இருக்கும் தன்மையாக இருந்த திறன்பேசிகளின் (smart phones) அளவும் இந்த மாற்றத்திற்கான ஒரு முக்கிய காரணியாக இருந்தததையும் அவர் சுட்டிக் காட்டினார். மாறி வரும் இந்தச் சூழலில் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகள் பற்றி மேலும் பேசுகையில், வியாபாரங்களில் முதலிடுவதில் ஈடுபடுவதற்கு இன்று இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளதென்பதை உறுதிப்படுத்திய, பத்மலால், இதற்கான நன்றி தகவல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கும் மற்றும் இணையத் தளங்களிற்குமே உரியது எனத் தெரிவித்தார். 2012 இல் Takas இன் ஆரம்பத்திலிருந்து மேலும் அனுபவங்களைப் பகிரும் பொழுது, பல்மடங்கான விநியோக நிறுவனங்கள், இன்று விநியோகச் செய்முறையை இலகுபடுத்தியுள்ளமைக்கு முரணாக, அன்று வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகிப்பதிலிருந்த சிரமங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். சிறிய நிறுவனங்களுக்கு சௌகரியமான கொடுப்பனவு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்த வங்கிகள் உட்பட இ-வர்த்தகத்தைச் சுற்றி உதவியாகவுள்ள தொழில் துறைகளின் அபிவிருத்தி பற்றியும் கூட அவர் எடுத்துரைத்தார். வழமைக்கு மாறாக அரசியல் விஞ்ஞானம் மற்றும் உளவியல் கற்கை நெறிகளிலான பட்டங்களுடன் கொள்கை சார்ந்த துறையிலிருந்து வந்த, பத்மலால் ஏனைய வேலைகளுக்கு மத்தியில் தான் கற்றது போன்று, ஆர்வங் கொண்ட எவரையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்துகிறார். அவரைப் பொறுத்த வரை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தளம் என்பவற்றுடன், பூகோளவியல் சார்ந்த வரையறைகள் குறைவடைந்துள்ளன, தூரம் என்பது இனிமேலும் கவனத்தில் கொள்ளக்கூடிய விடயமன்று – மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான எவரும் இன்று ஒன்லைன் மூலமாக கொள்வனவு செய்து கொள்வதற்கு முடியும். கூகிள் தளத்தில் வெறுமனே ஒரு தேடுதலை மேற்கொள்வதன் மூலமாக அல்லது அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக் கழகம் போன்ற கீர்த்தியும் சிறப்பு வாய்ந்ததுமான நிலையங்களில் ஓர் இலவச ஒன்லைன் கருத்தரங்கில் பங்குபற்றுவதன் மூலம் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளும் கூட இன்று இலகுவாக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பத்தில் ஈடுபடுவதற்கு விரும்பும் ஒவ்வொரு இளைஞரும் அடிப்படை ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்படல் வேண்டுமென்பதையும் கூட பத்மலால் இங்கே வலியுறுத்தினார். இலங்கைக் கல்வி முறைமையின் போதுமான தன்மை தொடர்பில், குறிப்பிடுகையில், எங்களது கல்வி முறைமை மூலமாகத் தொடரும் தீர்க்கமான சிந்திக்கும் திறனின்மை பற்றி அவர் விமர்சித்தார். தடைகளுக்குப் பதிலாக கற்றுக் கொள்வதற்கும் வளர்ச்சிக்குமான வாய்ப்புகளாகத் தோல்விகளை ஏற்றுக் கொள்வதற்கு இளைஞர்களை பத்மலால் அழைத்தார். லங்கா ஏஞ்சல்ஸ் நெட்வேர்க் (Lanka Angels Network) இன் ஒரு முன்னாள் பயனாளியாக உள்ளதிலிருந்து அதன் முகாமைத்துவ சபையின் ஓர் உறுப்பினராக வந்த, பத்மலால் கருதுகோள்களை அல்லது எண்ணங்ளைப் பூர்த்தி செய்து நிறைவேற்றுவதற்கு உதவி கேட்பது முக்கியமானது எனத் தெரிவிக்கிறார். உலகம் மாற்றமடைவது தொடர்கின்றதைப் போன்றே வியாபார மாதிரிகளும் மாறுகின்றன, அதனால், இ-வியாபாரத் தீர்வுகளை வழங்குவதற்கு தனது இ-வர்த்தகத் தளத்திற்கு வெளியே Takas காலடி எடுத்து வைத்தது போன்று இளம் தொழில் முனைவோர்களும், தங்களது வாடிக்கையாளர்களுக்காக நெகிழ்ச்சியான தீர்வுகளுக்கு அனுசரித்து அவற்றை வழங்குவதற்கு இயலுமாக இருத்தல் வேண்டும். ஒருவரது பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வதை ஒரு முக்கியமான சவாலாகவும் மற்றும் தேவைப்பாடாகவும் கருதுவதை ஒரு வெற்றிகரமான தலைவரில் தான் பாராட்டுவதாகத் அவர் தெரிவித்தார். ஒருவரது வரையறைகளைத் அறிந்து கொள்வதன் மூலம், மற்றவர்கள் சிறந்து விளங்கும் துறைகளில் அல்லது விடயங்களில் உதவிகளுக்கு நீங்கள் கேட்பதற்கு முடியுமென்பதையும் மற்றும் இவ்வாறே ஒரு தொழில் முனைவோர் தனது வியாபாரத்திற்கு ஆதரவளித்து உதவுவதற்கு தனக்கான அணியினைக் கட்டியெழுப்புதல் வேண்டுமெனவும், அவர் மேலும் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொழில்நுட்பத் தொழில்துறை முகம் கொடுக்கும் பல சவால்களுள், இரண்டு முக்கியமானவற்றின் மீது பத்மலால் கவனம் செலுத்தினார்; சிறிய சந்தையளவு மற்றும் நகர மையங்கள் (கொழும்பு, கண்டி, கம்பஹா போன்றவை) தவிர்த்து, நாட்டின் ஏனைய பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்திற்கான அணுகுவழியின்மை என்பவை அவையாகும். ஆண்கள் ஆதிக்கம் கொண்ட இத்துறையின் போக்கை உடைப்பதற்கு பெண்கள் கூடுதலாக இத்துறையில் உள் நுழைவதற்கான தேவை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இணையத்தளக் கருத்தரங்கில் பேசுவதற்கான வாய்ப்பைப் பாராட்டிப் பேசுகையில், வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது வியாபார விழுமியங்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் பத்மலால் வலியுறுத்தினார். நேர்மையாக இருத்தல் மற்றும் குறுக்கு வழிகளைத் தவிர்த்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். அதன் பணியாளர்கள் அல்லது முதலீட்டார்களாக என, Takas அணியின் அனைத்து தன்மைகளிலும் அதன் பன்முகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது பற்றியும் பத்மலால் பெருமிதம் கொண்டிருந்தார். தவறான நோக்கம் கொண்டவர்களால் தகவல் தொழில் நுட்பத்துறை தொடர்ச்சியாக துஷ்பிரயோகிக்கப்பட்டும் தவறாக உபயோகிக்கப்பட்டும் வருகையில், இந்த நாட்டில் சமூகங்களிடையே புரிந்து கொள்ளுதலை வளர்ப்பதற்கு ஒரு சக்தி மிக்க சாதனமாக தகவல் தொழில்நுட்பத் துறை பரிணாமம் அடைவதற்கு ஒரு பெரும் சாத்தியப்பாடு உள்ளதை தான் அவதானிப்பதாகவும் கூறி தனது கலந்துரையாடலை அவர், நிறைவு செய்தார். இக்கலந்துரையாடலைக் காண்பதற்கு அல்லது செவிமடுப்பதற்குத் நீங்கள் தவறியிருந்தால், வல்யூஸ்4ஆல் முகநூல் (Values4all Facebook) பக்கத்தில் சூம் (Zoom) கலந்துரையாடல் நேரலைக்கான காணொலி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.